செவ்விகாணும்போது முக்கியமாக உங்கள் கேள்விகளில்மட்டும் கவனமாக இருக்காதீர்கள். ஒரு சாதாரண உரையாலின்போது ஒருவர் கூறுவதை உற்றுக்கேட்பது எவ்வளவு அவசியமோ அதைவிட அவசியமானது ஒரு நேர்காணல். ஒருவர் கூறுவதை முழுக்கவனத்துடன் நீங்கள் கேட்கிறீர்கள் என்பது செவ்வி காண்பவரிற்கு ஒரு பாதுகாப்பு உணர்வைக் கொடுக்கும். தவிரவும் உற்றுக்கேட்டலின்மூலம் பல புதிய கேள்விகளும் உங்கள் மனதில் எழும். நீங்கள் ஏற்கனவே எழுதிவைத்துள்ள ஒழுங்கில்தான் கேள்விகளைக் கேட்கவேண்டும் எனவும் எண்ணாதீர்கள். ஒருவர் தரும் பதிலைவைத்து ஒழுங்குமுறையை மாற்றி அமைக்கக்கூடிய தகமையை ஊடகவியலாளர்கள் வளர்த்துக்கொள்ளவேண்டும். அதேவேளை காணொளி மற்றும் கேட்டல் ஊடகங்களிற்க்கு செவ்விகாண்பவர்கள், ம்-கொட்டுவதைத் தவிர்க்கவேண்டும். ஏனென்றால் ஒரு விடயத்தை சுருக்கி எடிட் செய்யும்போது உங்களுடைய «ம்» «ஆம்» என்கின்ற ஒலிகள் இடைஞ்சலாக அமையலாம். ஒலி எழுப்பாமல் தேவையான அளவு தலையை மெலும் கீழும் ஆட்டுவதன் மூலம் நீங்கள் ஆர்வமாகக் செவியுறுகிறீர்கள் என்பதை உண்ர்த்தலாம். இதன்மூலம் உங்களுடைய அநாவசியமான ஒலிகள் பதிவதைத் தவிர்க்கஏதுவாகும்.
ஓரு நேர்காணலின்பின்னர் செவ்விகாணப்பட்டவர்பற்றிச் சில ஊடகவியலாளர்கள் எதிர்மறை அபிப்பிராயங்களைக் கூறுவதைக் காணலாம். «அவர் கோபமாக இருந்தார், அவர் உணர்வுகளை வெளிப்படுத்தாமல் ஒரு மிகுந்த துறைசார்வல்லுனராக மட்டுமாக இருந்தார்» என்றெல்லாம் செவ்விக்கு வந்தவர்களைப் பற்றிக் குறை கூறுவர். தவிரவும் «அவர் கேள்விகளிற்குப் பதிலளிக்காமல் நழுவிகொண்டார்» என்றுகூடச் சிலர் கூறிக்கொள்வர். நேர்காணலைச் சரியாக அணுகாத செவ்விகாணப்படுபவர்கள் உண்டென்பது சரிதான். ஆனால் அதேவேளை எந்தவொரு செவ்விகாணப்படுபவரையும் ஊடகவியலாளர்கள் உரிய வகையில் அணுகினால் ஒரு நேர்காணலைத் திருப்திகரமாக நடாத்தமுடியும் என்பதைக் கவனத்தில்கொள்க.